நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் மக்களவையில் புதிய வருமான வரி மசோதா தாக்கல் செய்யப்பட்டதையடுத்து வருமான வரித்துறையில் புதிய விதிகள் அமலுக்கு வரவுள்ளன. தனிநபரின் வருமானம் மட்டுமின்றி E-Mail, சமூக வலைத்தள கணக்குகள், ஆன்லைன் முதலீடு உள்ளிட்டவற்றை புதிய வருமான வரி மசோதாவின் பிரிவு 247-ன் படி, வருமான வரித்துறை அதிகாரிகள் அனுமதியின்றி ஆய்வு செய்யும் நடைமுறை விரைவில் வரவுள்ளது.
வருமான வரித் தாக்கலின்போது வருமான வரித்துறை ஒவ்வொருவரின் கணக்கையும் ஆய்வு செய்கிறது. வரி ஏய்ப்பு ஏதும் இருந்தால் ஆய்வு செய்து சோதனை நடைபெறும். அவ்வாறு வருமான வரித் துறை ஆய்வின்போது வருமான விவரங்கள் மட்டும் ஆய்வு செய்யப்பட்ட நிலையில் இனி தனிப்பட்ட நபரின் இமெயில், சமூக வலைத்தள கணக்குகள், வங்கிக் கணக்கு விவரங்கள் உள்ளிட்டவற்றை அதிகாரிகள் ஆய்வு செய்யும் நடைமுறை அடுத்தாண்டு வரவுள்ளது.
இதற்கு வருமான வரித் துறை அதிகாரிகளுக்கு முழு அதிகாரம் அளிக்கப்படவிருக்கிறது. நிதி மோசடி, அறிவிக்கப்படாத சொத்துக்கள், வரி ஏய்ப்பு ஆகியவற்றைத் தடுக்க இது உதவும் என்றும் வருகிற 2026-27 நிதியாண்டு முதல் இது அமலுக்கு வரவிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, வருமான வரித் தாக்கலின்போது உங்களுடைய வருமானம் அல்லது சொத்துக்கள் குறித்து முழுமையான விவரங்களை அளிக்கவில்லை என்றால் அடுத்தாண்டு முதல் அதிகாரிகள், உங்களுடைய E-Mail, வங்கிக் கணக்குகள், சமூக வலைத்தளங்களைக்கூட இனி பார்க்க முடியும்.