வருமானத்திற்குள் செலவு செய்வது எப்படி முக்கியமானதோ, அதே போல கூடுதல் வருமானத்தை சரியாக செலவு செய்வதும் முக்கியமானது. இது சற்று கடினம்தான். போனஸ் அல்லது எதிர்பாராமல் வரும் கூடுதல் தொகையை எதிர்காலத்திற்காக சிறிது சேமிக்காமல் விரும்பிய வகையிலே செலவு செய்வது ஏற்றது அல்ல.
தற்போது நடந்து முடிந்த பட்ஜெட் தாக்களில் புதிய வருமான வரிவிதிப்பு முறையின் கீழ், 12 லட்சம் ரூபாய் வரை வரி செலுத்த வேண்டாம் என அளிக்கப்பட்டுள்ள நிலையில், பலருக்கும் கூடுதல் வருமானம் கையில் இருக்கும். அதை வீணாக செலவு செய்யாமல், இந்த தொகையை பயன்படுத்த முறையான திட்டமிடல் தேவை:
ஆடம்பர செலவுகள்:
எந்தவித திட்டமும் இல்லாமல் கூடுதல் வருமானத்தை ஆடம்பரமாக செலவு செய்யும் வாய்ப்பு இருக்கிறது. தேவையில்லாத மிகை செலவுகளையும் செய்யக்கூடும். சேமிப்பு, முதலீடு போன்றவற்றுக்கு சிறிய தொகையை ஒதுக்கிய பிறகு மீதம் இருக்கும் கூடுதல் பணத்தை செலவிடுவது ஏற்றதாக இருக்கும்.
ஒரே முறை:
12 லட்சம் வரை வரி கிடையாதே என்ற சந்தோஷத்தில் கூடுதல் வருமானம் அனைத்தையும் செலவு செய்ய முற்படும் போது, ஒரே முறையில் மொத்த தொகையையும் செலவு செய்ய தோணும். மேலும், பழைய முறையிலுள்ள வரிச்சலுகை சேமிப்பு முதலீடுகள் தேவையற்றதாக தோணலாம். ஆனால், இது உங்களுடைய ஓய்வு காலத்தில் பெரும் சிக்கலாக இருக்கலாம்.
திட்டம் தேவை:
உங்களுடைய கூடுதல் வருமானத்தை செலவு செய்ய திட்டம் இடவேண்டும். முதலில், உங்களிடம் இருக்கும் கடனை கட்டிமுடிக்கவேண்டும். அதன் பிறகு மீதி பணத்தில் சிறிதளவு உங்களுடைய எதிர்காலத்தை மனதில் கொண்டு மியூச்சுவல் பண்ட், SIP, மருத்துவ காப்பீடு, NPS, போன்றவற்றில் முதலீடு செய்து வைப்பது நல்லது.