15.08.2024 சுதந்திர தின விழாவில் முதலமைச்சர் அனைவருக்கும் குறைந்த விலையில் மருந்துகள் கிடைக்கும் வகையில் முதற்கட்டமாக “1000 முதல்வர் மருந்தகங்கள்” அமைக்கப்படும் என்று அறிவித்தார்.
இத்திட்டத்தினை செல்படுத்துவதன் தொடர்பாக 29.10.2024 அன்று முதலமைச்சர் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் முதல்வர் மருந்தகம் அமைப்பதற்கான ஏற்பாடுகள் குறித்து கூட்டுறவு துறை மற்றும் தமிழ்நாடு மருத்துவ சேவை கழகம் ஆகியோருக்கு அறிவுரை வழங்கினார்.
முதல்வர் மருந்தகத்திற்கு தேவையான பொதுப்பெயர் (ஜெனரிக்) மருந்துகள் தமிழ்நாடு மருத்துவ சேவை கழகத்தால் கொள்முதல் செய்யப்பட்டு வழங்கப்படும். மருத்துவம் சார்ந்த இதர உபகரணங்கள், சித்தா, ஆயுர்வேதம், இம்காப்ஸ், டாம்கால் மற்றும் யுனானி மருந்துகள், சர்ஜிக்கல்ஸ் மற்றும் நியூட்ராசூட்டிக்கல்ஸ் உள்ளிட்ட மருந்து வகைகள் தமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு இணையத்தால் கொள்முதல் செய்யப்பட்டு வழங்கப்படும்.
முதல்வர் மருந்தகம் அமைக்க விருப்பமுள்ள பி-பார்ம், டி-பார்ம் (B-Pharm / D.Pharm) சான்று பெற்றவர்கள் அல்லது அவர்களின் ஒப்புதலுடன் மருந்தகம் அமைக்க விருப்பம் உள்ளவர்கள் இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
இத்திட்டம் மூலம் முதல்வர் மருந்தகங்கள் உருவாக்கப்பட்டு, வரும் 2025 ஜனவரி மாதம் முதல் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கதொடர்புடைய அலுவலர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.