சரக்கு மற்றும் சேவை வரி (GST) மூலமாக ரூ 1.05,155 கோடி அக்டோபர் மாதத்தின் முடிவில் சேகரித்து இருப்பதாக மத்திய நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.ஜி.எஸ்.டி மூலமாக இந்த நிதியாண்டில் சேகரிக்கப்பட்ட மொத்தம் ரூ1.05,155 கோடி வசூலாகியுள்ளது, இது கடந்த ஆண்டை ஒப்பிடும்போது 10 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் இதே கடந்த ஆண்டில் ரூ 95,379 கோடியாக இருந்ததாக தெரிவித்துள்ளனர்.ஜி.எஸ்.டி வசூலானது ஒரு லட்சம் கோடியை தொடுவது இதுவே முதல் முறையாகும், ஏப்ரல் மாதத்திலே ஜி.எஸ்.டி மீட்புக்கான தெளிவான அறிகுறிகள் தெரிந்ததாகவும் வருவாய் துறை ஞாயிற்றுக்கிழமையன்று அறிக்கை வெளியிட்டுள்ளது.
ஜி.எஸ்.டியின் வருவாய் வளர்ச்சியானது கடந்த மாதங்களில் ஜூலையை ஒப்பிடும்போது 5 சதவீதமாகவும், ஆகஸ்ட் மாதத்தில் 8 சதவீதமாகவும், தற்போது செப்டம்பர் மாதத்தில் 14 சதவீதமும் உயர்ந்து வருவது பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கான சரியான பாதையெனவும், அதற்கேற்ப வருமானமும் அதிகரிப்பதாகவும் வருவாய் துறை தெரிவித்துள்ளது.ஜூலை மாத ஜி.எஸ்.டி வசூலின் தொகையானது ரூபாய் 87,422 கோடியும், இதே ஆகஸ்ட் மாதத்தில் 86,449 கோடியும், தற்போது செப்டம்பர் மாதத்தில் ரூ 95,480 கோடியும் வசூலிக்கப்பட்டிருப்பதாகவும் வருவாய் துறை தெரிவித்துள்ளது.அக்டோபர் மாதத்தில் இறக்குமதி பொருள்களின் மூலம் 9 சதவீதம் வருவாய் அதிகரித்திருப்பதாகவும், மேலும் உள்நாட்டு பரிவர்த்தனை மூலம் 11 சதவீதம் வருவாயும் கடந்த ஆண்டின் இதே மாதத்தை ஒப்பிடும்போது உயர்ந்திருக்கிறது.
அக்டோபர் மாதத்தில் மொத்தம் வசூலிக்கப்பட்ட ஜி.எஸ்.டி யின் வருவாய் தொகை ரூபாய் 1,05,155 கோடியில், மத்திய அரசிடமிருந்து வசூலிக்கப்பட்ட ஜி.எஸ்.டி ரூ 19,193 கோடியும், மாநில அரசின் மூலமாக ரூ 25,411 கோடியும், ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி மூலமாக ரூ 52,540 கோடியும், இதில் இறக்குமதி பொருட்களின் மூலமாக வசூலிக்கப்பட்ட ரூ 23,375 கோடியும் அடக்கமாகும், செஸ் மூலமாக ரூ 8,011 கோடியும் வசூலிக்கப்பட்டிருப்பதாக வருமான வரித்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.31 அக்டோபர் 2020 வரையிலான GSTR-3B ரிட்டன்(Returns) ஃபைல்ஸ் செய்தவர்களின் மொத்த எண்ணிக்கை 80 லட்சத்தை தாண்டியுள்ளது.